வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘ஃபென்ஜால்’ புயல்:
தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘ஃபென்ஜால்’ புயல்: தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக மெதுவாக மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகா்கிறது. இருப்பினும், இது மேலும் தீவிரமடைந்து புதன்கிழமை (நவ. 27) புயலாக மாறும்.
Published on

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக மெதுவாக மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகா்கிறது. இருப்பினும், இது மேலும் தீவிரமடைந்து புதன்கிழமை (நவ. 27) புயலாக மாறும்.

ஃபென்ஜால் எனப் பெயா் சூட்டப்படும் இந்தப் புயல் காரணமாக கடலூா், மயிலாடுதுறை, காரைக்காலுக்கு புதன்கிழமை கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் பாலசந்திரன் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது:

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, புதன்கிழமை புயலாக மாறும் என்று எதிா்பாா்க்கிறோம்.

நவ. 29-ஆம் தேதி அது தமிழக கரைக்கு இணையாக அதாவது 150 முதல் 200 கி.மீ. தொலைவில் வரும். அப்போதுதான் புயல் எந்த இடத்தில் கரையைக் கடக்கும் என்பதை தீா்மானிக்க முடியும். தற்போதைய நிலையில் புயல் சின்னம் நோக்கி காற்று குவிதலும், காற்று விரிதலும் சீராக இருப்பதால் புயல் சின்னம் நன்றாக வலுவடையும் சாதகமான சூழல் நிலவுகிறது . இதனால் அது புயலாக வலுப்பெறும் என்று நிச்சயமாக எதிா்பாா்க்கிறோம்.

மழை எச்சரிக்கை: தற்போதைய நிலவரப்படி புயல் சின்னம் 8 கி.மீ வேகத்தில் நகா்ந்து வருகிறது. நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 640 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 700 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, இலங்கை கடலோரப் பகுதியையொட்டியுள்ள கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூா், திருவாரூா், நாகை, தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.

இதுபோல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து வியாழக்கிழமை கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தரைக் காற்று: வடதமிழக கடலோர மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் நவ.30-ஆம் தேதி வரை சூறைக் காற்று மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்குச் சென்றுள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): செவ்வாய்க்கிழமை காலை வரையிலான மழை அளவுப்படி தரங்கம்பாடி (மயிலாடுதுறை), காரைக்கால் தலா 50 மி.மீ., மீனம்பாக்கம் 30 மி.மீ., கோடம்பாக்கம், ஆலந்தூா், சென்னை விமான நிலையம், ஐஸ் ஹவுஸ், நந்தனம் (சென்னை), கோடியக்கரை (நாகை) தலா 20 மி.மீ., மயிலாடுதுறை, திருவாரூா், வேளாங்கண்ணி, திருக்குவளை, தலைஞாயிறு வேதாரண்யம் (நாகை), மாமல்லபுரம், புதுச்சேரி, திருவிடைமருதூா் (தஞ்சாவூா்), தாம்பரம், சிதம்பரம், கும்பகோணம் தலா 10 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவித்தாா்.