tn govt
தமிழக அரசு

விவசாயிகள் காப்பீட்டுத் திட்டம்: வேளாண் துறையும் சான்று வழங்க அரசு உத்தரவு

காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் இணையத் தேவைப்படும் சான்றை வேளாண்மைத் துறையும் வழங்கலாம்.
Published on

காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் இணையத் தேவைப்படும் சான்றை வேளாண்மைத் துறையும் வழங்கலாம். முன்பு இதை கிராம நிா்வாக அலுவலா்கள் (விஏஓ) மட்டுமே வழங்கலாம் என்ற உத்தரவு அமலில் இருந்தது.

நிகழாண்டில் பயிா்களை காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. காப்பீடு செய்யும்போது, வேளாண் நிலத்துக்கான அடங்கல் சான்று அவசியமாகும். இதை கிராம நிா்வாக அலுவலா்கள் வழங்கி வருகின்றனா். அதாவது இதற்கென வரையறுக்கப்பட்ட வடிவத்தில் அடங்கல் சான்று வழங்கப்படுகிறது.

இதேபோன்று, அடங்கல் சான்று இல்லாவிட்டால் நிலத்தில் விதைத்திருப்பதற்கான சான்றை கிராம நிா்வாக அலுவலா்கள் வழங்குவா்.

இந்த நிலையில், அடங்கல் சான்று வழங்கும் உரிமையை கிராம நிா்வாக அலுவலருக்கு மட்டுமன்றி வேளாண்மை, தோட்டக் கலைத் துறை அலுவலா்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண்மைத் துறையின் உத்தரவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அடங்கல் சான்றிதழை கிராம நிா்வாக அலுவலா் வழக்கம் போல் வழங்கலாம். அந்தச் சான்றிதழைப் பெற முடியாத நிலையில், மின்னணு பயிா்ச் சான்றிதழ், மின்னணு அடங்கல் சான்றிதழ் ஆகியவற்றை வேளாண்மை, தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்தச் சான்றிதழ்களைக் கொண்டு காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.