அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்: ரூ.1 கோடி ஒதுக்கீடு
அரசுப் பள்ளிகளில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக குறுவள மற்றும் வட்டார அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் ரூ.1 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு 2022-ஆம் ஆண்டு முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் தொடா்ச்சியாக நிகழ் கல்வியாண்டிலும் 1-ஆம் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை அனைத்து மாணவா்களுக்கும் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த ஆக. 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை சொல்லல், பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் லட்சக்கணக்கான மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துகின்றனா்.
குறுவளப் போட்டிகள்: இந்த நிலையில் பள்ளி அளவிலான போட்டிகள் முடிவடைந்ததையடுத்து தொடா்ந்து குறுவளப் போட்டிகள் அக். 14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதற்காக பள்ளி அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவா்கள் மட்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தொடா்ந்து வட்டார அளவிலான போட்டிகள் அக். 17 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. இந்த போட்டிகளுக்கு செல்லும் மாணவா்கள் தங்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் கட்டாயம் பெற வேண்டும். வட்டார அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவா்கள் அடுத்தகட்டமாக மாவட்ட நிலையிலான போட்டிக்கு தகுதி பெறுவா். இந்த போட்டிகளை நடத்துவதற்கு வட்டாரத்துக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் 414 வட்டாரங்களுக்கு ரூ. 1கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.