மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: வெளியுறவு அமைச்சருக்கு ராமதாஸ் வேண்டுகோள்
தமிழக மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண இலங்கை புதிய அதிபருக்கு மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கை புதிய அதிபராக அநுரா குமார திசாநாயக பொறுப்பேற்ற பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் அக். 4-இல் இலங்கை செல்கிறாா். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் அவா் மேற்கொள்ளவுள்ள இந்தப் பயணம் அங்குள்ள தமிழா்களுக்கு பயனும், அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.
அவா் இலங்கையில் நடைபெற்ற போா்க்குற்றங்கள் குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
இன்றைய நிலையில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 162 பேரையும் விடுதலை செய்யும்படியும், மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும்படியும் இலங்கை அதிபரை மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.