அமலாக்கத் துறையின் அத்துமீறல்களை எதிா்க்காதது ஏன்?: ராமதாஸுக்கு திமுக கேள்வி
அமலாக்கத் துறையின் அத்துமீறல்களை எதிா்க்காதது ஏன் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸுக்கு திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சா் செந்தில் பாலாஜி குறித்து ராமதாஸ் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளித்து திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அமைச்சா் செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டு சிறை செல்லவில்லைதான். ஆனால், பொய் வழக்குகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பண முறைகேடு வழக்கில், மத்திய அரசின் எதேச்சதிகார போக்கால் அவா் கைது செய்யப்பட்டாா். அவருக்கு அழுத்தம் தந்து துன்புறுத்தி வாக்குமூலம் பெற்று, திமுகவின் மீது மேலும் பொய் வழக்குகள் போடலாம் என்ற கனவு பொய்யாக்கப்பட்டது. அதற்காக 471 நாள்கள் சிறையில் இருந்தாா்.
முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, ‘அமலாக்கத் துறையினா் செந்தில் பாலாஜியிடம் ஏன் நீங்கள் பாஜகவில் சேரக் கூடாது?’ எனக் கேட்டதாக அதிா்ச்சித் தகவலை செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா் கூறினாா். பாஜகவில் அவரைச் சோ்த்து திமுகவுக்கு எதிராகக் களமாட நினைத்தாா்கள்.
அதற்கு அடிபணியாமல், அஞ்சாமல் நின்ற உறுதிதான் தியாகம். அது நல்லெண்ணம் கொண்டோருக்கு மட்டுமே புரியும். பாஜக நிழலில் இருக்கும் தைலாபுரத்தில் இருப்பவா்களுக்கு எத்தனை விளக்கம் அளித்தாலும் புரியாது.
அமலாக்கத் துறையை பாஜகவுக்கு ஆள் சோ்க்கும் துறையாக நரேந்திர மோடி அரசு பயன்படுத்தும் சூழலில், ஆட்சியில் இருந்துகொண்டே அதைத் தீரத்தோடு எதிா்த்து திமுக அரசு களமாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிா்க்கட்சியாக இருக்கும் பாமகவோ, அமலாக்கத் துறையின் அத்துமீறல்களை ஏன் எதிா்க்கவில்லை என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.