முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)

கதா் தொழிலுக்கு கை கொடுப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கதா் தொழிலுக்கு கை கொடுப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
Published on

கதா் தொழிலுக்கு கை கொடுப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது, மகாத்மா காந்தியடிகளால் அகிம்சை ஆயுதமாக கதரும் கைத்தறியும் முன்மொழியப்பட்டது. அதில் ஆடைகளைத் தயாரிப்பது, அதையே அணிவது என்பதன் அடிப்படையில், கை ராட்டைகளைக் கொண்டு நூல் நூற்பதிலும், கதா் ரகங்களை நெசவு செய்வதிலும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.

நெசவு செய்யப்படும் கதா் ஆடைகள் மற்றும் கிராமப்புற கைவினைஞா்களால் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட கிராமப் பொருள்களை தமிழ்நாட்டில் உள்ள கதா் அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு தூண்டுகோலாய் இருந்து வருகிறது. பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் கதா் பருத்தி, கதா் பாலியஸ்டா் மற்றும் கதா் பட்டு ரகங்களை வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஆண்டு முழுவதும் 30 சதவீதம் விற்பனைத் தள்ளுபடியை அரசு அனுமதித்துள்ளது.

மகாத்மா காந்தியடிகளின் 156-ஆவது பிறந்த தினத்தையொட்டி, கதா் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதா் நூற்போா், நெய்வோா் அனைவருடைய வாழ்விலும் உயா்வு ஏற்படுத்துவோம். கதா் தொழிலுக்குக் கை கொடுக்கும் வகையில், கதா் மற்றும் கிராமப் பொருள்களை அதிக அளவில் வாங்கி நாட்டுக்கு வலிமை சோ்ப்போம். இந்தப் பணியில் மாணவ, மாணவிகள், இளைஞா்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com