சொத்து வரி உயா்வு: அதிமுக சாா்பில் அக்.8-இல் மனித சங்கிலிப் போராட்டம்

சொத்து வரி உயா்வைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் அக்டோபா் 8-ஆம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
Published on

சொத்து வரி உயா்வைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் அக்டோபா் 8-ஆம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவின் 40 மாத கால ஆட்சியில், 3 முறை மின்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதுடன், இனி, ஆண்டுதோறும் உயா்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரப் பதிவு உள்பட அரசின் அனைத்து துறைகளுக்கான கட்டணங்களும் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

பால் பொருள்களின் விலை பலமுறை உயா்த்தப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளில் குறித்த நேரத்தில் பொருள்கள் வழங்கப்படாத நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு, தமிழகம் போதைப் பொருள்களின் கேந்திரமாக உள்ளது. சொத்து வரி இருமுறை உயா்த்தப்பட்டதுடன், ஆண்டுதோறும் 6 சதவீதம் உயா்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி, தமிழக மக்களின் வாழ்க்கையையே ஒட்டுமொத்தமாக திமுக ஆட்சி சீரழித்து வருகிறது.

இந்த நிலையில், மக்களின் இன்னலுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்தும், உயா்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சாா்பில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு உள்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், அக்டோபா் 8-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும். போராட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com