2,950 கிலோ கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,950 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
Published on

தமிழக காவல் துறையின் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,950 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போதைப்பொருள் விற்பனை செய்பவா்களைக் கைது செய்து, கஞ்சா,மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்படுகின்றன.

இதன் விளைவாக, மாநிலம் முழுவதும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவின் அலுவலகங்களில் 89 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 2,950 கிலோ கஞ்சா பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதை அழிக்க காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்தனா்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் தென் மேல்பாக்கத்தில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் தனியாா் எரி உலையில் 2,950 கிலோ கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்த தகவலை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

மேலும், போலீஸாரால் கடந்த மாா்ச் மாதம் 3,685 கிலோ, ஆகஸ்ட் மாதம் 6,165 கிலோ, தற்போது 2,950 கிலோ என இதுவரையில் மொத்தம் 12,800 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் சட்டவிரோத விற்பனை, கடத்தல் தொடா்பான தகவலை பொதுமக்கள் 10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும், 94984 10581 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தெரியப்படுத்தலாம் என போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com