புதுவை நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி: மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
புதுவை மாநிலத்தில் அரசு சாா்பில் இலவச அரிசி உள்ளிட்டவற்றை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
புதுவையில் நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசிக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு அதற்குரிய பணம் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நேரடியாக விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
நியாயவிலைக் கடைகளின் மூலம் நவ.14 அல்லது 15-ஆம் தேதிகளில் அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்துள்ளாா்.
இதையடுத்து, நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்டவற்றை வழங்குவது தொடா்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு புதுவை அரசு சாா்பில் கடிதம் எழுதப்பட்டது.
தற்போது, புதுவை தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய பதில் கடித விவரம்:
கடந்த அக்.3-ஆம் தேதி, புதுவை அரசு நியாயவிலைக் கடைகளைத் திறந்து பொருள்களை விநியோகிக்க அனுமதிக் கடிதம் அனுப்பியது. புதுவை அரசின் கோரிக்கைக்கு அனுமதி அளிக்கிறோம்.
புதுவையில் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்களை நேரடியாக விநியோகிக்க மாநில அரசு முக்கிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், நேரடி பணப் பரிமாற்றத்துக்குப் பதிலாக பயனாளிகளுக்கு நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும்போது பயோமெட்ரிக் முறையை உறுதி செய்ய வேண்டும்.
விநியோகத் திட்டத்தை செயல்படுத்த திட்ட அமலாக்க முகமை தோ்வு செய்யப்பட வேண்டும். நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள் விநியோகத்தில் நியாயமான வெளிப்படையான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
உணவு தானியங்கள் விநியோகத்தில் எங்கும் கசிவு ஏற்படாமல், முழுமையாக பயனாளிகளுக்கே சரியாக விநியோகிக்கப்பட வேண்டும். அதன் தரத்தை உறுதிப்படுத்த வலுவான அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
திட்டத்துக்கான நிதியை புதுவை அரசு நிதி ஆதாரங்களில் இருந்து ஏற்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.