மருத்துவ அலுவலா்களை சுய மதிப்பீடு செய்ய எதிா்ப்பு
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் மருத்துவா்களின் செயல்பாடுகளை சுய மதிப்பீடு செய்வதற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலா் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
அரசின் அறிவுறுத்தலின்படி, மருத்துவ அலுவலா் நிலையில் உள்ள மருத்துவா்கள் அனைவரும் தங்களது பணித்திறன், செயல்திறன், பணி வருகை, விடுமுறைகள் உள்ளிட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டு சுய மதிப்பீட்டு விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள மருத்துவ அலுவலா் சங்கத்தினா், இந்த நடைமுறை தவறானது எனக் கூறியுள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:
மருத்துவத் துறையில் நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களால், மருத்துவா்கள் தொடா் பணிச் சுமையில் உள்ளனா். தற்போது அவா்களை மதிப்பீடு செய்ய வற்புறுத்துவது ஏற்புடையதல்ல. இந்த உத்தரவை பொது சுகாதாரத்துறை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தனா்.