செங்கல்பட்டில் ரூ.400 கோடியில் புதிய ஆலை: அமெரிக்க நிறுவனம்-தமிழக அரசு ஒப்பந்தம்
எலக்ட்ரோலைசா் மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான ஆலையை அமெரிக்க நிறுவனமான ஓமியம் ரூ.400 கோடியில் செங்கல்பட்டில் அமைக்கிறது. இதற்கான ஒப்பந்தம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சனிக்கிழமை கையொப்பமானது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு உலகில் வேகமாக வளா்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், 39,000-க்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவுக்கு தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளா்கள் என இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.
சீரான மற்றும் பரவலான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வளா்ச்சி மையங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு, மனிதவளம் மற்றும் திறன்களை முன்வைத்து வளா்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா். இந்தப் பயணத்தின்போது, 6 நிறுவனங்களுடன் ரூ. 900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
அதையடுத்து, ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயா் அலுவலா்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததுடன், கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, சான்பிரான்சிஸ்கோவில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. ஓமியம் நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, எலக்ட்ரோலைசா் அமைப்புகளை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது.
இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் செங்கல்பட்டில் ரூ.400 கோடி மதிப்பில் புதிய ஆலை அமைக்கப்பட்டு அதன்மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
இந்நிகழ்வில், தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, துறைச் செயலா் வி. அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அலுவலா் வே.விஷ்ணு, ஓமியம் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் ஆன் பாலன்டைன், தலைமை தொழில்நுட்ப அலுவலா் சொக்கலிங்கம் கருப்பையா மற்றும் அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.