கோவையில் 103 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
கோவை, உக்கடம் மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 103 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
கோவை, உக்கடம் லாரிபேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் சந்தையில் 35 கடைகள், செல்வபுரம் புறவழிச் சாலையில் உள்ள சில்லறை மீன் சந்தையில் 16 கடைகள் என 51 கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மீன் வளா்ச்சித் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், மீன்களின் தரம் பரிசோதனை செய்யப்பட்டதுடன், கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தனா்.
அப்போது, மொத்த மீன் சந்தையில் 5 கடைகளில் 65 கிலோ, சில்லறை விற்பனை சந்தையில் 4 கடைகளில் 38 கிலோ என 103 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இதன் சந்தை மதிப்பு ரு.50,150 என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த 9 கடைகளுக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிா்ணயச் சட்டம் 2006 பிரிவு 55-ன்கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.