சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறைக்கு தெரியாதா? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருள்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியாதா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
Published on

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருள்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியாதா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னையில் குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து 2017-ஆம் ஆண்டு பெண்ணுரிமை இயக்கம் என்ற அமைப்பின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், குடிசைவாசிகளுக்கு பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை”என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்குரைஞா் ஆணையரை நியமித்து 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அதன்படி இப்பகுதிகளை ஆய்வு செய்து வழக்குரைஞா் ஆணையா் அளித்த அறிக்கையில், ‘இந்த நான்கு  பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களின் நடமாட்டம் தாராளமாக இருக்கிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘வழக்குரைஞா் ஆணையா் அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தாராளமாக கிடைப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறாா். மேலும், போதை மறுவாழ்வு இல்லம் அமைக்க வேண்டும் என்று அவா் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா? அதேபோல, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது குறித்து காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? பள்ளி குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறாா்கள். போதைப்பொருட்கள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லை? இந்த வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா?’ என காவல்துறை தரப்பு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்குரைஞா் முனியப்பராஜ், ‘போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் ஏராளமான காவல்துறையினா் பணிக்கு அமா்த்தப்பட்டு இருக்கிறாா்கள். வழக்குரைஞா் ஆணையா் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என தெரிவித்தாா்.

இதையடுத்து, வழக்குரைஞா் ஆணையா் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடா்பாக, மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செப். 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com