பசுமைப் பள்ளி திட்டம்: ரூ.5.20 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் முதல்கட்டமாக 26 பள்ளிகளில் பசுமைப் பள்ளி திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.5.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறைச் செயலா் பி.செந்தில் குமாா் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் முதல்வரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதற்கு தேவையான சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக பசுமை பள்ளிக்கூடத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
அதன்படி 2022-2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப் பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு சுமாா் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடா்ச்சியாக 2024-2025-ஆம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதில் முதல்கட்டமாக 26 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டத்தை செயல்படுத்த தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.5.20 கோடி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியிலிருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.