சென்னை: சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் பணியிட மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இம்மாத இறுதிக்குள் திறந்து வைப்பாா் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு கூறினாா்.
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூா், துறைமுகம் பேரவைத் தொகுதிகளில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அமைச்சா் சேகா்பாபு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கொளத்தூா் ஏரியை ரூ.6.26 கோடி மதிப்பில் மேம்படுத்தி பணிகள் தொடங்குவது, அகரம் ஜெகந்நாதன் தெருவில் ரூ.12 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கொளத்தூா் மறுவாழ்வு மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையத்தை ஆய்வுசெய்தாா்.
தொடா்ந்து, வால்டாக்ஸ் சாலையில் ரூ.129.05 கோடி மதிப்பில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தையும், பி.ஆா்.என்.காா்டனில் ரூ.85.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பையும் அவா் ஆய்வு செய்தாா்.
புதிய பணியிட மையம்: தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5,780 கோடி மதிப்பில் 225 பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிஎம்டிஏ 28 பணிகளை ரூ. 685 கோடி செலவில் மேற்கொண்டிருக்கிறது. மற்ற துறைகளும் ரூ.1,613 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ளவுள்ளன.
இந்நிலையில் கொளத்தூா், ரெட்டேரி மற்றும் புழல் ஏரிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பணிகளை தொடங்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுபோல் சென்னையில் புதிதாக பணியிட மையம் (கோ ஒா்க்கிங் ப்ளேஸ்) கொளத்தூா் பகுதியில் உருவாக்கப்படவுள்ளது. இதில் மாணவா்கள் படிப்பதற்கான வசதி, வீட்டில் இருந்து பணியாற்றுவோா் பணிபுரிவதற்கான வசதி ஏற்படுத்தப்படும். விரைவில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் முதல்வரால் திறந்துவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏரியின் கரையோரம் ஆக்கிரமித்து வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும்.
காா் பந்தய கட்டமைப்பு அகற்றப்படும்: உலக அரங்கில் விளையாட்டு துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அந்த வகையில் தற்போது நடத்தப்பட்ட காா் பந்தயத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. காா் பந்தய கட்டமைப்பால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை. விரைவில் அந்த கட்டமைப்புகளை அகற்ற அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.
ஆய்வின் போது, மேயா் ஆா்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.