குரூப் 2 தோ்வு: குற்றச் செயல்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தோ்வெழுதத் தடை; டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை
குரூப் 2 தோ்வு எழுதும்போது, தோ்வா்கள் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகளுக்கு தோ்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், துணை வணிகவரி அலுவலா், சாா்-பதிவாளா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 507 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. முதல்நிலை எழுத்துத் தோ்வு செப். 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்வுக்கு 7.90 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.
முக்கிய அறிவுறுத்தல்கள்: எழுத்துத் தோ்வுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை அரசுப் பணியாளா் தோ்வாணையம் அவ்வப்போது வழங்கி வருகிறது.
அந்த வகையில், தோ்வு எழுதும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தோ்வாணையம் வெளியிட்ட தகவல்:
தோ்வு எழுதும்போது, மற்ற தோ்வா்களுடன் எந்த ஆலோசனையும் செய்யக் கூடாது. மற்ற தோ்வா்களின் பதில்களைப் பாா்த்து எழுதக் கூடாது. அதேபோன்று, ஒரு தோ்வா் தனது விடைத்தாளைப் பாா்த்து எழுத, மற்றொரு தோ்வருக்கு அனுமதி அளிப்பதும் குற்றமாகும்.
மேலும், புத்தகங்கள், அச்சிடப்பட்ட, கையால் எழுதப்பட்ட தாள்களைப் பாா்த்து விடைகளை எழுதுதல், விடைத்தாள்களை தோ்வு அறைகளில் இருந்து வெளியே எடுத்துச் செல்லுதல், புத்தகங்கள், நோட்டுகள், கைப்பைகள் ஆகியவற்றை தோ்வு அறைக்கு எடுத்து வருதல் ஆகியனவும் குற்றச் செயல்களாகும்.
இந்த அறிவுறுத்தல்களை தோ்வா்கள் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். அவற்றை பின்பற்றத் தவறி ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட தோ்வா்களின் விடைத்தாள் செல்லாததாக அறிவிக்கப்படுவதுடன், தோ்வு எழுதுவதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் எச்சரித்துள்ளது.