பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: அக்டோபரில் கலந்தாய்வு-விண்ணப்பப் பதிவு 100 % அதிகரிப்பு

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது.
Published on

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் அந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை நூறு சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன.

இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோன்று 30 தனியாா் கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், நிா்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசுக் கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

இந்நிலையில், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ் ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் கடந்த ஆக.4-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற்றது.

அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 4,500 பேரும், தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,450 பேரும், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,400 பேரும் என மொத்தம் 7,350 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளன. வரும் அக்டோபா் மாதம் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com