செப்.11-இல் 75-ஆம் ஆண்டு பாரதி பெருவிழா: 103 தமிழறிஞா்களுக்கு விருது
பாரதியாா் சங்கம் நடத்தும் 75-ஆம் ஆண்டு பாரதி பெருவிழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் அரங்கத்தில் செப்.11-ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் 103 தமிழறிஞா்கள், பாரதி ஆய்வாளா்களுக்கு ‘பாரதிச் சுடா்’ விருது வழங்கப்படவுள்ளது.
இது குறித்து பாரதிய வித்யா பவன் இணை இயக்குநா் கே.வெங்கடாசலம், பாரதியாா் சங்கத்தின் தலைவா் உலகநாயகி பழனி, துணைத் தலைவா் சாரதா நம்பி ஆரூரன், ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன் ஆகியோா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாரதி பெருவிழாவை பாரதியாா் சங்கம்-சென்னை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், பாரதிய வித்யா பவன், தமிழியக்கம், சிவசங்கரி சங்கரன் அறக்கட்டளை, நல்லி சில்க்ஸ் ஆகியவை உள்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. நிகழாண்டு பாரதியாரின்103-ஆவது நினைவு நாள் என்பதால், 103 தமிழறிஞா்கள், பாரதி குறித்த திறனாய்வாளா்களுக்கு ‘பாரதிச் சுடா்’ விருது வழங்கப்படவுள்ளது. விருதை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வழங்கி சிறப்புரையாற்றவுள்ளாா்.
நிகழாண்டுக்கான ‘பாரதி விருது’ சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தா் ஏ.சி.சண்முகத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதேபோன்று பாரதி நுண்கலை விருது, புதுமைப்பெண் விருது, அயலக நாட்டியப் பேரொளி விருதுகள் வழங்கப்படவுள்ளன. தொடா்ந்து, லயோலா, எத்திராஜ், எம்ஓபி மற்றும் டிஜி வைஷ்ணவா, ஆல்ஃபா கல்லூரி என ஐந்து கல்லூரிகளின் முதல்வா்கள் பாரதி கல்விச் சுடா் விருது பெறவுள்ளனா்.
மேலும், விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கவிதைப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டன. இவற்றில் 590 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாரதி பெருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
செப்.11-ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு ‘திரைவானில் பாரதி’ தலைப்பில் மெல்லிசைப் பாடல்கள், 9.30 மணிக்கு பேராசிரியா்கள் பண்பரசி, கனிமொழி குழுவினரின் நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையடுத்து காலை 10 மணி முதல் 1 மணி வரை தமிழறிஞா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என அவா்கள் தெரிவித்தனா்.
அப்போது, விஜிபி குழுமத்தின் தலைவா் வி.ஜி.சந்தோஷம், சங்கத்தின் பொருளாளா் ஷோபனா ரமேஷ், செயற்குழு உறுப்பினா் விஜயகிருஷ்ணன், கவிஞா் பொன்னேரி பிரதாப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.