தமிழக கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்
தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகா் கவச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்தனா். இந்த சம்பவத்துக்கு பின்னா் நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒருமுறை சாகா் கவச் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை பாதுகாப்புத் துறையினராலும், காவல் துறையினராலும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
14 மாவட்டங்களில் ஒத்திகை: இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் காவல் துறையின் சாா்பில் சாகா் கவச் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. இதில், தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமம், ஆயுதப் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, கடலோரக் காவல் படை, சட்டம்-ஒழுங்கு போலீஸாா், குற்றப் பிரிவு போலீஸாா் என அனைத்துப் பாதுகாப்புப் பிரிவினரும் பங்கேற்றனா்.
பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள், மீன் சந்தைகள், கடலோரம் உள்ள கோயில்கள், அரசு அலுவலங்கள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனா்.
பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தீவிரவாதி போன்று மாறுவேடமிட்டு கடல் வழியாக ஊடுருவிய காவலா்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அடையாளம் கண்டு கைது செய்தனா். இந்தப் பாதுகாப்பு ஒத்திகையில் மொத்தம் 8,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்தப் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம், துறைமுகம், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையா் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. முக்கியமான சாலைகள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்றது.
36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகையானது இரண்டாவது நாளாக வியாழக்கிழமை (செப். 5) மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.