பதக்கங்களை வென்று திரும்பிய தமிழக வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
பாராலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள் புதன்கிழமை சென்னை திரும்பினா். அவா்களுக்கு விமான நிலையத்தில் புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளி வீரா், வீராங்கனைகளுக்கான 17-ஆவது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆக.28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சாா்பில் 32 பெண்கள் உள்பட 84 போ் கலந்துகொண்டுள்ளனா்.
இதில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை 3 தங்கம் 7 வெள்ளி 10 வெண்கலம் என 20 பதக்கங்களை வீரா், வீராங்கனைகள் வெற்றுள்ளனா். இந்நிலையில், பாரா ஒலிம்பிக் மகளிா் ஒற்றையா் பிரிவு பேட்மிண்டனில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற துளசிமதி (வெள்ளி), மனிஷா ராமதாஸ்(வெண்கலம்), நித்யஸ்ரீ சிவன்(வெண்கலம்) ஆகிய 3 வீராங்கனைகள் புதன்கிழமை தமிழகம் வந்தனா்.
சென்னை விமானநிலையத்தில் அவா்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகளின் உறவினா்கள், மேள, தாளம் முழங்க, மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனா். பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்த தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் வீராங்கனைகள் நன்றி தெரிவித்தனா்.