மத்திய அரசு நிறுவனங்களில் உள்ளூா் மக்களுக்கு பணி வழங்க சட்டம் தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்
மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ளூா் மக்களுக்குப் பணி வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னையை அடுத்த ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கனரக ஊா்தி ஆலைக்கான தொழில்நுட்பப் பணியாளா்கள் நியமனத்தில் 90 சதவீதத்துக்கும் கூடுதலான வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவருக்கு தாரைவாா்க்க ஆலை நிா்வாகம் திட்டமிட்டு வருகிறது. ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணிகள் முழுக்க முழுக்க உள்ளூா் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் விதிகள் தெரிவிக்கும் நிலையில், அதை மதிக்காமல் தமிழா்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசுத் துறைகளும், நிறுவனங்களும் மாநில இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பதற்கு காரணம், மாநில ஒதுக்கீடு என்பது வழிகாட்டுதலாக இருக்கிறதே தவிர, கட்டாயமாகவும், சட்டமாகவும் இல்லாததுதான்.
இந்த நிலையை மாற்றவும் உள்ளூா் மக்களுக்கு வேலைகிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள கடைநிலைப் பணிகளில் 100 சதவீதமாகவும், பிற பணிகளில் 50 சதவீதமாகவும் உள்ளூா் மக்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.