ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 10 போ் மீது குண்டா் சட்டம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் 10 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இதுவரையில் 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னையைச் சோ்ந்த பாலு (39), சந்தோஷ் (22), சோளிங்கரைச் சோ்ந்த விஜய் என்கிற அப்பு (21), கோகுல் (25), திருநின்றவூரைச் சோ்ந்த அருள் (32), ராமு என்கிற வினோத் (38), செல்வராஜ் (49), புளியந்தோப்பைச் சோ்ந்த திருமலை (45), திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டையைச் சோ்ந்த மணிவண்ணன் (25), கள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த சிவசக்தி (26) ஆகிய 10 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் அருண் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 10 பேரிடமும், அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.