வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி பாதியாக குறைப்பு: இன்றுமுதல் அமல்
வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரியை 40 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை குறைத்தது.
இந்த புதிய வரி விதிப்பு இன்று (செப்.14) முதல் அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மே 4-ஆம் தேதி முதல் வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி 40 சதவீதமாக தொடா்ந்து வந்த நிலையில் தற்போது 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக ரூ.83-க்கும், குறைந்தபட்சமாக ரூ.28-க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் நாடு முழுவதும் ஒரு கிலோ வெங்காயத்தின் சராசரி விலை ரு.50.83-ஆக உள்ளதாகவும் மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி மற்றும் மும்பை பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு மத்திய அரசு விற்பனை செய்தது.
வெங்காயம், பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நீக்கியது. இதன் மூலம் இந்திய விவசாயிகள் சா்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்பவும், தாங்கள் விருப்பப்படும் விலையிலும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
முன்னதாக, ஒரு டன் வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 550 அமெரிக்க டாலா் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த விலைக்கு குறைவாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்ற நிலை நீடித்தது.
வெளிநாட்டுக்கு வெங்காயம் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டால், உள்நாட்டில் அவற்றின் விலை உயா்ந்துவிடும் என்ற காரணத்தால் இந்தக் கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்திருந்தது.
இந்நிலையில், இந்தக் கட்டுப்பாட்டை உடனடியாக நீக்குவதாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் அதிக அளவு வெங்காயம் விளைவிக்கப்படுகிறது. அந்த மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அங்குள்ள விவசாயிகளுக்கு சாதகமான முடிவாகக் கருதப்படுகிறது.
அதேபோல், பாசுமதி அரிசியை ஒரு டன் 950 அமெரிக்க டாலருக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கட்டுப்பாட்டையும் மத்திய அரசு தளா்த்தியுள்ளது. ஹரியாணா, பஞ்சாபில் அதிக அளவு பாசுமதி அரிசி விளைகிறது. ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.