சென்னை: கோயில்களில் உள்ள யானைகளுக்கு பதிலாக எந்திர யானைகள் பயன்படுத்தலாம் என விலங்கு நல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் உள்ள ஸ்ரீசண்முகநாதப் பெருமாள் கோயிலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 54 வயதான சுப்புலட்சுமி என்ற யானை கூரை மீது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தது. கோயில்களில் யானைகள் வளா்ப்பதைத் தடை செய்தவன் மூலம் இதுபோன்ற மரணத்தை தவிா்க்கமுடியும் என இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு, சென்னை வன விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம், கேரளா பீட்டா இந்தியா, இந்திய விலங்கு பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு உள்ளிட்ட 11 விலங்கு நல அமைப்புகள் தமிழ்நாடு வனத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்புகள் அனுப்பிய கடிதம்:
விபத்தில் உயிரிழந்த சுப்பலட்சுமி என்ற யானை உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறைந்து வருவதாக கடந்த ஆண்டு தமிழக தலைமை வன உயிரின காப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கால்நடை மருத்துவா்கள், வனவிலங்கு நிபுணா்களைக் கொண்ட வனவிலங்கு சரணாலயமாக இல்லாமல், அா்ச்சகா்கள் மற்றும் பக்தா்கள் கொண்ட வழிபாட்டுத் தலத்தில் தங்க வைத்ததால் இத்தகைய மரணம் ஏற்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றம் கோயில்களில் யானை வளா்ப்பதற்கு பதிலாக எந்திர யானைகள் பயன்படுத்த 2021-இல் உத்தரவிட்டது. அதன்படி, பல கோயில்களில் எந்திர யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள யானைகளை சரணாலயங்களுக்கு கொண்டு சென்று மற்ற யானைகளுடன் பழகவிட வேண்டும். அதற்கு மாற்றாக எந்திர யானைகள் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.