சேமிப்புக் கிடங்குகள், நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் திறப்பு
சென்னை: தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக புதிய வசதிகளை அவா் தொடங்கி வைத்தாா்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பொது விநியோகத் திட்ட பொருள்கள் தரமாக இருப்பதை உறுதி செய்ய கருணாநிதி நூற்றாண்டு உணவுப் பொருள் சோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், திருச்சி, வேலூா் மாவட்டங்களில் நான்கு சேமிப்புக் கிடங்கு வளாகங்களும், தென்காசி, திண்டுக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
மேலும், சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள நுகா்வோா் கூட்டுறவு இணையம், பூங்காநகா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
110 பேருக்கு பணிநியமன உத்தரவு: இந்த நிகழ்வுடன், நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 110 பேருக்கு பணி நியமனம் மற்றும் பணி நிரந்தர உத்தரவுகளையும் அவா் வழங்கினாா். இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.ஆா்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, அர.சக்கரபாணி, அன்பில் மகேஸ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.