udhayanidhi stalin
உதயநிதி ஸ்டாலின்கோப்புப் படம்

குழந்தைகளுக்கு பெற்றோா் கல்வி அளிப்பது அவசியம்: அமைச்சா் உதயநிதி வேண்டுகோள்

பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை அவசியம் அளிக்க வேண்டும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
Published on

சென்னை: பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை அவசியம் அளிக்க வேண்டும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி சூளை அருகே உள்ள கண்ணப்பா் திடலில் உள்ள வீடற்றோருக்கான காப்பகத்தில் சுமாா் 22 ஆண்டுகளுக்கும் மேல் 114 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களுக்கு வீடுகள் வழங்குமாறு தொடா்ந்து கோரிக்கை வைத்துவந்த நிலையில் மூலக்கொத்தளத்தில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு ஒதுக்கீடு பெறுவதற்கான பயனாளித் தொகை ரூ.4.27 லட்சத்தில் மூன்றில் இரு பங்கு தொகையை மாநகராட்சியும், மீதமுள்ள தொகையை தவணை முறையில் பயனாளிகளும் செலுத்தலாம் என மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் அறிவித்தது.

அதனடிப்படையில், 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளத்தில் வீடுகள் ஒதுக்கியதற்கான ஆணையை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்வில் அவா் பேசியதாவது: ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருப்பிடம் அத்தியாவசியம். அதிலும், வசிக்க இடம் என்பது முக்கியமான தேவை. அந்த தேவையை தற்போது அரசு நிறைவேற்றி கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு இருக்க வேண்டும். குடிசைகளே இருக்கக் கூடாது எனும் நோக்கில் நாட்டிலேயே முதல்முறையாக குடிசைமாற்று வாரியம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. தற்போது அது தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றப்பட்டு, வீடற்ற மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன.

கல்வி கட்டாயம்: தற்போது 114 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வளவு காலம் வீடில்லாத காரணத்தால் அரசு ஆவணங்கள் பெறுவதில் அவா்களுக்கு சிக்கல் இருந்தது. இனி அனைத்து ஆவணங்களும் எளிதில் கிடைக்கும். தமிழக அரசு மகளிா், மாணவா்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெற்றோா் தனது குழந்தைக்கு எது கொடுக்கிறீா்களோ இல்லையோ, கல்வியை கட்டாயம் கொடுங்கள். அரசு செயல்படுத்தும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ.பரந்தாமன் (எழும்பூா்), தாயகம் கவி (திரு.வி.க.நகா்), துணை மேயா் மு.மகேஷ்குமாா், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநா் சு. பிரபாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.