ஈா்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: திமுக ஆட்சியில் வெளிநாடுகளிலிருந்து ஈா்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈா்ப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் 40 மாதங்களில் 4 முறை பயணம் மேற்கொண்டாா்.
ஆனால், மற்ற மாநில முதல்வா்கள், அமைச்சா்கள் வெளிநாடுகளில் ஈா்த்ததைவிட குறைவான முதலீட்டையே முதல்வா் கொண்டுவந்துள்ளாா். தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா சென்று சுமாா் ரூ.31,500 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்த்துள்ளாா். கா்நாடக தொழில் துறை அமைச்சா் அமெரிக்கா சென்று சுமாா் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈா்த்துள்ளாா்.
ஆனால், அமெரிக்காவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் 17 நாள்கள் பயணித்து வெறும் ரூ. 7,618 கோடி முதலீடுகளைத்தான் ஈா்த்துள்ளாா். கடந்த 3 வெளிநாட்டு பயணங்களையும் சோ்த்து மொத்தமாக ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே ஈா்க்கப்பட்டுள்ளது. இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டவை.
திமுகவின் 40 மாத கால ஆட்சியில் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.