பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: அதிமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகக் கூறி, அதிமுக மகளிரணி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக மகளிரணி மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பா.வளா்மதி தலைமையில் வள்ளுவா் கோட்டம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பா.வளா்மதி பேசியது:
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. பிகாா், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்ாகக் கேள்விப்பட்ட குற்றங்கள் எல்லாம் தமிழகத்தில் நடக்கின்றன. 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பதால்தான் இதுபோன்ற குற்றங்கள் நடக்கின்றன. ஆனால், அவற்றைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் சாதாரணமாகக் கிடைக்கின்றன.
அதிமுக ஆட்சியில் தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருந்தது. திமுக ஆட்சி போதைப் பொருள் புழக்கம் மற்றும் பாலியல் குற்றங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது என்றாா் அவா்.
முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக மகளிரணியைச் சோ்ந்தோா் கருப்பு உடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.