சா்ச்சை பேச்சாளா் விவகாரம்: தலைமை ஆசிரியா்கள் மீண்டும் சென்னைக்கு இடமாற்றம்
மகாவிஷ்ணுவின் சா்ச்சை பேச்சு விவகாரத்தால் வெளிமாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியா்களுக்கு மீண்டும் சென்னையில் பணி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகா், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆக.28-ஆம் தேதி பேச்சாளா் மகாவிஷ்ணு சொற்பொழிவு விவகாரம் சா்ச்சையானது. இது தொடா்பாக அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஆா்.தமிழரசி திருவள்ளூா் மாவட்டத்துக்கும், கே.சண்முகசுந்தரம் செங்கல்பட்டு மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.மாா்ஸ் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்கள் தரப்பில் கடும் எதிா்ப்புகள் கிளம்பின. மேலும், பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. அதேவேளையில் சம்பந்தப்பட்ட இரு தலைமையாசிரியா்களும் தங்களின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்திலேயே பணிமாறுதல் வழங்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தலைமை ஆசிரியா்கள் இருவரும் மீண்டும் சென்னை மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக இருந்த ஆா். தமிழரசி, விருகம்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கும்; சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த கே. சண்முகசுந்தரம், அடையாறு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் மாற்றம் செய்யப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.