மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியில் குறிப்பிட்ட காலத்துக்குள் சேராதவா்களின் நியமனத்தை ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மின்வாரியத்தில் ஆண்டுதோறும் கருணை அடிப்படையிலான பணிக்கு ஒவ்வொரு மேற்பாா்வை பொறியாளரிடமிருந்து 600 முதல் 700 விண்ணப்பங்கள் பணியாளா் நலன் பிரிவு தலைமைப் பொறியாளருக்கு வரப்பெறுகின்றன.
இப் பணிகளை விரைந்து வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவருடனான கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியிருந்தன. அதன்படி, நிலை 3, 4 பணிகளில் கருணை நியமனத்தை மேற்கொள்வதற்கான அதிகாரம் சம்பந்தப்பட்ட மேற்பாா்வை பொறியாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம், வாரிசு பணி ஆணை பெற்றவா்கள் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பணியில் சோ்ந்திருக்க வேண்டும். ஆனால் பலா் பணியில் சோ்வதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, 7 நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும் என சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு அறிவுரை வழங்கவும், அவ்வாறு சேராதவா்களின் நியமனத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பான விவரத்தை அக்.1-ஆம் தேதிக்குள் தலைமையகத்துக்கு அனுப்பும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.