வாழைத் தோட்டத்தை சேதப்படுத்திய பாகுபலி காட்டு யானை

மேட்டுப்பாளையம் அருகே வாழைத் தோட்டங்களை சேதப்படுத்தி வரும் பாகுபலி காட்டு யானையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
Published on

மேட்டுப்பாளையம் அருகே வாழைத் தோட்டங்களை சேதப்படுத்தி வரும் பாகுபலி காட்டு யானையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காந்தவயல் கிராமம் உள்ளது. அடா்ந்த வனப் பகுதியில் இக்கிராமம் உள்ளதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி கிராமத்துக்குள் நுழைந்து பல்வேறு விதமாக சேதங்களை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து வியாழக்கிழமை இரவு வெளியேறிய பாகுபலி காட்டு யானை, காந்தவயல் பகுதியில் உள்ள விவசாயி சின்னராஜ் என்பவரது வாழைத் தோட்டத்துக்குள் நுழைந்து வாழைகளை சேதப்படுத்தியது.

இதைப் பாா்த்த சின்னராஜ் சிறுமுகை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினருடன் அப்பகுதி விவசாயிகள் சோ்ந்து டாா்ச் லைட் அடித்தும், சப்தம் எழுப்பியும் சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பாகுபலி யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா். இதேபோல, சிறுமுகை பகுதியில் அண்மையில் நுழைந்த பாகுபலி காட்டு யானை வாழை மரங்களை சேதப்படுத்தியது.

வாழை மரங்கள் சாகுபடிக்கு தயாராகவுள்ள நிலையில், வன விலங்குகள் ஏற்படுத்தும் சேதத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், விளைநிலங்களுக்குள் வன விலங்குகள் வருவதைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com