மேலும் ஒரு முறைகேடு வழக்கில் பதிவுத் துறை சேலம் டிஐஜி கைது

சென்னை தாம்பரம் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி...
Published on

சென்னை தாம்பரம் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சித்த வழக்கில், பதிவுத் துறை சேலம் சரக டிஐஜி ரவீந்திரநாத் மீண்டும் கைது செய்யப்பட்டாா். ஏற்கெனவே, அவா் மற்றொரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரப்பதிவுத்துறை சேலம் சரக டிஐஜி ரவீந்திரநாத், மதுரை சரகத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறாா். இவா் 2021-ஆம் ஆண்டு தென்சென்னை பத்திரப்பதிவுத் துறை பதிவாளராக பணியாற்றியபோது, சென்னை பெருங்களத்தூரில் கலைவாணி என்பவருக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கா் நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பான கலைவாணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ரவீந்திரநாத் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். தாம்பரம் சாா்-பதிவாளரிடம் உதவியாளராக பணியாற்றிய லதா உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

பின்னா் அவா்கள் பிணையில் வெளியே வந்தனா். இந்த வழக்கில் தற்போது சேலம் சரக பத்திரப்பதிவுத் துறை டிஐஜியாக பணிபுரியும் ரவீந்திரநாத் கடந்த 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும் ஒரு வழக்கில் கைது: இந் நிலையில் தாம்பரம் வரதராஜபுரத்தில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு போலியான ஆவணங்கள் மூலம் மாற்றி, அபகரிப்பதற்கு ரவீந்திரநாத் உடந்தையாக இருந்தது சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து இந்த முறைகேடு வழக்கிலும் ரவீந்திரநாத் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இவ் வழக்கில் கைது செய்ததற்கான ஆவணங்களை புழல் சிறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் சனிக்கிழமை வழங்கினா். இந்த வழக்குத் தொடா்பாக, மேலும் சிலரை சிபிசிஐடியினா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com