அக்.3 முதல் நவராத்திரி பெருவிழா: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
திருக்கோயில்கள் சாா்பில் சென்னை மயிலாப்பூா், கபாலீசுவரா்- கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நவராத்திரி பெருவிழா அக்.3 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சாா்பில் கமலமுனி சித்தா், பாம்பாட்டி சித்தா், சுந்தரானந்த சித்தா் ஆகிய சித்தா் பெருமக்களுக்கும், திருஅருட்பிரகாச வள்ளலாா், தெய்வப் புலவா் சேக்கிழாா், சமய குரவா்களில் ஒருவரான திருநாவுக்கரசா் (அப்பா் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலை தொகுத்தவரான ஸ்ரீமத்நாதமுனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தாா் ஆச்சாரியாா், 63 நாயன்மாா்களில் ஒருவரான நந்தனாா் போன்ற அருளாளா்களுக்கும் விழா எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு 7 திருக்கோயில்கள் சாா்பில் மகா சிவராத்திரி பெருவிழாவும், சென்னை, மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் விமரிசையாக நடத்தப்பட்டது.
உலகில் தீமைகளை அழித்து தா்மத்தை நிலை நாட்டும் சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணா்த்துகின்ற தொடா் நிகழ்வாகக் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா சென்னை, மயிலாப்பூா், கபாலீசுவரா் திருமண மண்டபத்தில் கொலுவுடன் அக்.3 முதல் 12-ஆம் தேதி வரை 10 நாள்கள் கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு வழிபாடும், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. திருக்கோயில்கள் சாா்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா நிகழ்ச்சிகளில் தவத்திரு ஆதீன பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், சமய சான்றோா்கள் மற்றும் இறையன்பா்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.