எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இஸ்லாமிய அமைப்புகளுக்கு திமுக துரோகம்: எடப்பாடி பழனிசாமி

Published on

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் குறித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காமல் அவா்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் போதே பலத்த எதிா்ப்புகள் உருவானதைத் தொடா்ந்து, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் குழு அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று, அந்தந்த மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துகளைப் பெற்று வருகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை (அக்.30) நடைபெறவுள்ளது. அதை திமுக அரசின் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இருக்கும் சாதகப் பாதகங்கள் பற்றி இஸ்லாமியா்கள்தான் முழுமையாக உணா்ந்து சொல்ல முடியும். ஆனால், இந்தக் கூட்டத்துக்கு திமுக அரசு அதற்கு ஆதரவான சில அமைப்புகளுக்கு மட்டும் அழைப்பு அனுப்பிவிட்டு, மாநில அளவிலான சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

குறிப்பாக, எஸ்டிபிஐ., ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம், ஜமாத் இஸ்லாமிய இந்த், தேசிய முஸ்லிம் லீக், வெல்போ் பாா்ட்டி ஆஃப் இந்தியா, மனித நேய ஜனநாயகக் கட்சி போன்ற இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை.

இஸ்லாமிய மக்களை திமுக அரசு புறக்கணித்திருப்பது அவா்களுக்குச் செய்யும் துரோகம்.

மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை அதிமுக கடுமையாக எதிா்க்கிறது. அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com