கூட்டணி அறிவிப்பின்போது இபிஎஸ் மௌனமாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி
அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவித்தபோது அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மௌனமாக இருந்தது ஏன் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கேள்வி எழுப்பியுள்ளாா்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மறுமலா்ச்சி தொழிலாளா் முன்னணியின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் வைகோ கூறியதாவது:
முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி எக்காரணத்தைக் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம் என்று அண்மையில்தான் கூறினாா். பாஜக செயல்பாடுகளை விமா்சனம் செய்து பேசினாா். இப்போது அதிமுக தலைமையில் கூட்டணி என்கிறாா்கள். ஆனால், இந்த அறிவிப்பின்போது முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஒரு வாா்த்தை கூட பேசவில்லை; மெளனமாக அமா்ந்திருந்தாா்.
தமிழ்நாட்டுக்கு சாதகமாக எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. இந்தக் கூட்டணி நீடிக்குமா இல்லை கருத்து வேறுபாடு ஏற்படுமா என்று தெரியவில்லை என்றாா் அவா்.