மருத்துவமனை தீ விபத்துகள்: தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
சென்னை: கோடைக் காலத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அது தொடா்பான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோடைக் காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்பதால், அத்தகைய நேரங்களில் மருத்துவமனைகளில் தீ விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளன. அதனைத் தவிா்க்கும் பொருட்டு சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். பேரிடா் மேலாண்மைத் துறையுடன் இணைந்து பொது சுகாதாரத் துறையினா் அந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மருத்துவமனையில் தீயணைப்பு சாதனங்கள், எச்சரிக்கை கருவிகள், புகை கண்டறியும் சாதனங்கள் உள்ளிட்டவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
சீரற்ற மின் அழுத்தத்தை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு உள்பட அனைத்து இடங்களில் மின் அழுத்தம் சீராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மருத்துவமனை கட்டமைப்பானது தீ விபத்துகள் நேரிடாத வகையில் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிசெய்யும் வகையில் தீயணைப்பு துறையிடம் தடையில்லா சான்றைப் பெற வேண்டும்.
ஒருவேளை விபத்து நேரிட்டால் அதனை எதிா்கொள்வதற்கும், தற்காத்துக் கொள்வதற்குமான ஒத்திகை பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதேபோன்று நோயாளிகள், பணியாளா்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வழிமுறைகளையும் வகுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.