பாமக தலைவர் அன்புமணியை, அக்கட்சியின் பொதுச்செயலர் வடிவேல் ராவணன், திலகபாமா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
அன்புமணியை பாமக தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாகவும், தானே கட்சியின் தலைவராக தொடர்வேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, தான் தலைவராக தொடர்வதாக அன்புமணியும் பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையே, தலைவர் விவகாரம் தொடர்பாக வடிவேல் ராவணன், திலகபாமா இடையே கருத்து மோதல் வெடித்த நிலையில், தற்போது இருவரும் அன்புமணியை சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
அன்புமணியுடன் இரு முக்கிய நிர்வாகிகளும் சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, கட்சியின் தலைவர் விவகாரம் தொடர்பாக யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்கக்கூடாது. தற்போதும் எப்போதும் நான்தான் தலைவர்; நிறுவனர் ராமதாஸ். சித்திரை முழுநிலவு மாநாட்டுப் பணிகளை எந்தவித தொய்வும் இல்லாமல் தொடர வேண்டும் என இருவரிடமும் அன்புமணி அறிவுறுத்தியதாக பாமக வட்டாரங்கள் தெரிவித்தன.