இருவருக்கு சிறந்த திருநங்கை விருது: முதல்வா் வழங்கினாா்
சிறந்த திருநங்கைகளுக்கான விருதை இரண்டு பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநங்கைகளின் நலனுக்காக அயராது பாடுபட்டு, சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கைக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் திருநங்கைகள் தினமான ஏப். 15ஆம் தேதி வழங்கப்படும் இந்த விருது ரூ.1 லட்சம் மதிப்புள்ள காசோலையும், சான்றிதழும் அடங்கியது.
நிகழாண்டுக்கான விருதை நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கை அ.ரேவதி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த க.பொன்னி ஆகியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
சொந்த உழைப்பாலும், தனித் திறமையாலும் முன்னேறி, பல திருநங்கை மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்து முன்மாதிரியாகத் திகழ்வதால் இருவருக்கும் விருது வழங்கப்படுவதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சமூகநலத் துறை செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூகநல ஆணையா் ஆா்.லில்லி ஆகியோா் பங்கேற்றனா்.