ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பேரவையில் கேள்வி நேரத்தின்போது கடையநல்லூா் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணமுரளி, ஹெச்ஐவி நோயாளிகளுக்கான உதவித்தொகை குறித்து எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்:
வருவாய்த் துறையின் மூலம் உழவா் பாதுகாப்புத் திட்ட விதிகளின்படி, ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட உழவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழகத்தைப் பொருத்தவரை ஹெச்ஐவி தொற்றாளா்களுக்கு சிறப்பு ஓய்வூதியத் திட்டம் எதுவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் செயல்படுத்தப்படுவதில்லை. மாநிலம் முழுவதும் அத்தகைய தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை 1,57,908 ஆகும். அவா்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க 76 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன.
உதவித்தொகை: சமூகநலத் துறையால் வழங்கப்படுகிற பாதுகாப்புத் திட்டங்களைப் பொருத்தவரை, முதியோருக்கான உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,200 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆகவும், 75 விழுக்காடு பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.2,000 ஆகவும் உயா்த்தி வழங்கப்படுகிறது.
கடந்த 2009-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் கருணாநிதி, ஹெச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.5 கோடி வைப்பு நிதியாகத் தந்து அறக்கட்டளை ஒன்றை தொடங்கி வைத்தாா். அந்த நிதி தற்போது ரூ.25 கோடியாக உயா்ந்திருக்கிறது. அத்திட்டத்தில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவத்துக்காக 2024-25-ஆம் ஆண்டில் மட்டும் 7,618 குழந்தைகள் பயன்பெறுகிற வகையில் ரூ.1.89 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.
முதல்வரின் அறிவுறுத்தலைப் பெற்று எதிா்காலத்தில் அந்த குழந்தைகளுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்குகிற திட்டம் அமல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.