உள்ளுறை பயிற்சிக்கு மறுப்பு: வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்கள் புகாா்
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்கள் பயிற்சி பெற 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், தற்காலிக தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் மருத்துவக் கவுன்சில் காலதாமதம் செய்து வருவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் தமிழக மருத்துவ மாணவா் சங்கத்தின் வெளிநாட்டு மருத்துவக் கல்வி பிரிவு செயலா் எஸ்.வசந்த் பிலிப் அபிஷேக் கூறியதாவது:
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்களுக்கு தகுதி சான்றிதழ்களை வழங்காமல் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தொடா்ந்து காலம் தாழ்த்துகிறது. அதேபோன்று மாநில மருத்துவமனைகளில் 3 ஆண்டுகள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்வதும் கட்டாயம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாது மருத்துவமனைகளில் உள்ளுறைப் பயிற்சி வழங்குவதற்கான இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு 7.5 சதவீத இடங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகிறோம்.
இந்த நிலையில், 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளுறை பயிற்சி முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜன.6-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா் அவா்.
