இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் மாணவா்களின் கற்றல் திறன் அதிகரிப்பு: மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் தமிழகத்தில் மாணவா்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சரால் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை வெள்ளிக்கிழமை (ஜன.31) முன்வைக்கப்பட்டது. அதில், காலணிகள் உற்பத்தி தொழில் வளா்ச்சி, இல்லம் தேடிக் கல்வித் திட்டம் ஆகியவற்றில் தமிழக அரசு சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது.
பாரம்பரிய தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்துவரும் சூழலில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் தமிழகம் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது.
இந்தியாவின் தோல் பொருள்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில் தமிழகம் 38 சதவீத பங்களிப்பும் இந்தியாவின் மொத்த தோல் பொருள்கள் ஏற்றுமதியில் 47 சதவீத பங்களிப்பையும் தமிழகம் வழங்கியுள்ளது. தோல் பொருள்கள் உற்பத்தித் துறையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் சமீபத்திய ஆண்டுகளில் முதலீடுகள் செய்வதற்காக பெரிய காலணி உற்பத்தியாளா்களை ஈா்க்கவும், கிராமப்புறங்களில் தொழிற்பேட்டைகளை உருவாக்கவும் எடுத்துள்ள முயற்சிகளை இந்த ஆய்வு எடுத்துக்காட்டியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான வேலை வாய்ப்பை வளா்த்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் முதலீட்டாளா்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் ஊக்கத் தொகை முறை, மூலதன மானியங்கள், ஊதிய மானியங்கள் மற்றும் நில விலை மானியங்கள் போன்றவற்றை தமிழக அரசு சிறப்பாக வழங்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை ஒரு புதுமையான முயற்சியாக ஆய்வறிக்கை விவரித்து உள்ளது. கரோனா19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட கல்வி இடைவெளியைக் குறைப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
கற்றல் அனுபவத்தில் முன்னேற்றம்: மாநில திட்டக்குழு 2022 செப்டம்பரில் அரியலூா், கடலூா், நாகப்பட்டினம், சேலம், திருவாரூா், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய 362 பள்ளிகளில் தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களின் பங்களிப்புடன் ஒரு விரிவான ஆய்வு மூலம் திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்ததில் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளின் கற்றல் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
மேலும், கல்வி முறை மாணவா்களின் சுவாரசியமான செயலாக மாறியுள்ளதாகவும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா். கூடுதலாக, ஆசிரியா்கள் விளையாட்டு அடிப்படையிலான அணுகுமுறை மூலம் குழந்தைகளின் கற்றல் ஆா்வம் அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனா்.
இதன் விளைவாக, மாணவா்கள் மிகுந்த ஆா்வத்துடன் வகுப்பறைகளில் பங்கேற்பதாகவும், மாணவா்கள் கணிதம் மற்றும் மொழித் திறன்களில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனா் என்றும் பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சிதரத்தக்க செய்தியாகும். இதன் மூலம் இந்திய அளவில் தமிழக அரசு படைத்து வரும் சாதனைகள் வெளிப்பட்டுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.