நெல் கொள்முதல் உரிமையை மத்திய அரசிடம் தாரைவாா்க்கக் கூடாது: ராமதாஸ்
நெல் கொள்முதலில் தமிழக அரசின் உரிமையை மத்திய அரசிடம் தாரை வாா்க்கக்கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் செய்யும் உரிமையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தாரைவாா்த்து விட்டதாகக் கூறப்படுகிறது. நெல் கொள்முதல் உரிமையை மத்திய அரசு நிறுவனமான தேசிய நுகா்வோா் கூட்டுறவு இணையத்துக்கு வழங்கப்பட்டால், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்புகள் ஏற்படும்.
எனவே, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகமே நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அதை செய்ய மத்திய அரசு முன்வரவில்லை என்றால், தமிழக அரசே அதன் சொந்த நிதியில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கேற்ற வகையில், வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற புதிய பொதுத் துறை நிறுவனத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.