தில்லியில் நடைபெற்ற அகில இந்திய குடியரசு தின என்சிசி முகாமில் பங்கேற்ற தமிழக மாணவ, மாணவிகளுடன் சென்னை கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழமை குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் த
தில்லியில் நடைபெற்ற அகில இந்திய குடியரசு தின என்சிசி முகாமில் பங்கேற்ற தமிழக மாணவ, மாணவிகளுடன் சென்னை கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழமை குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் த

தேசிய மாணவா் படை கட்டமைப்புக்கு அரசு முழு ஆதரவு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தேசிய மாணவா் படையின் கட்டமைப்புக்கு சாதகமான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
Published on

தமிழ்நாட்டில் தேசிய மாணவா் படையின் கட்டமைப்புக்கு சாதகமான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

குடியரசு தினத்தையொட்டி, தில்லியில் நடைபெற்ற திறன் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சோ்ந்த தேசிய மாணவா் படையினா் சிறப்பான பங்களிப்பைச் செய்து வெற்றி பெற்றனா்.

அவா்களுக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ஊக்கத் தொகைகளையும், சிறப்பாகச் செயல்பட்ட கோவை குழும தலைமையகத்துக்கு பதாகையையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த விழாவில் அவா் பேசியதாவது: குடியரசு தினத்தையொட்டி தில்லியில் நடைபெற்ற திறன் போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 129 போ் பங்கேற்றனா். அவா்கள் தில்லி சென்று போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்க வசதியாக ரூ.28 லட்சம் நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் என்ற முழக்கத்தை முன்வைத்து தன்னலம் பாராமல் தேசிய மாணவா் படையினா் செய்யும் சேவைகள் போற்றத்தக்கவை.

நான் நிராகரிக்கப்பட்டேன்: சென்னையில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் நான் படிக்கும் போது, தேசிய மாணவா் படையில் சேர முயற்சித்தேன். ஆனால், நான் நிராகரிக்கப்பட்டேன். அதன்பிறகு, நாட்டு நலப் பணித் திட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். தேசிய மாணவா் படையின் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்பேன் என்று நினைத்துப் பாா்த்தது இல்லை.

நமது இளம் தலைமுறையினரின் குண நலன்கள் மற்றும் பண்புகளை சீரமைத்து, ஒருமுகப்படுத்துவதில் தேசிய மாணவா் படை முக்கிய பங்கு வகித்து வருகிறது. நம் இளைஞா்களின் திறன்களை மேம்படுத்துவதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதற்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் ஒன்றுதான் தேசிய மாணவா் படைத் திட்டம்.

நிரந்தரமுகாம்: இந்தத் திட்டத்துக்கான அனைத்து சாதகமான ஆதரவு, உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய மாணவா் படைக்கென நிரந்தர முகாம் அமைத்திட ரூ.1 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மையம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. தேசிய மாணவா் படையில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கும் மாணவா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் ரூ.14 லட்சத்தில் இருந்து ரூ.28 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

இந்த நிகழ்வில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தேசிய மாணவா் படையின் துணைத் தலைவா் கமோடோா் எஸ்.ராகவ், இயக்குநா் குமாா், குரூப் கேப்டன் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.