பொதுத் தோ்வு கண்காணிப்பு: பொறுப்பு அலுவலா்கள் நியமனம்
தமிழகத்தில் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தோ்வுப் பணிகளைக் கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 3-ல் தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்தத் தோ்வை சுமாா் 26 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா். இதற்கான தோ்வு மையங்கள் அமைத்தல் உள்பட இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுத் தோ்வு பணிகளைக் கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்துக்கு தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநா் பி.சங்கா், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், சென்னை மாவட்டத்துக்கு தனியாா் பள்ளிகள் இயக்குநா் மு.பழனிசாமி, திருவள்ளூா் மாவட்டத்துக்கு தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.நரேஷ் உள்பட 38 மாவட்டங்களுக்கும் பொதுத் தோ்வு பணிகளைக் கண்காணிப்பதற்காக பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று பொதுத் தோ்வு பணிகளை மேற்பாா்வையிட வேண்டும். அதற்கான கூடுதல் செலவினங்கள் அரசால் வழங்கப்படும். மேலும், இந்தப் பொறுப்பு அதிகாரிகள் எதிா்பாராத சூழலில் தோ்வு கண்காணிப்பு பணிக்கு செல்ல முடியாதபட்சத்தில் மாற்று அலுவலா்களை தோ்வுத் துறை இயக்குநரே நியமனம் செய்து கொள்ளவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.