பஞ்சாபில் நடந்தது என்ன?: தமிழக கபடி வீராங்கனைகள் தகவல்

பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை திரும்பிய வீராங்கனைகள் அதுகுறித்து விளக்கமளித்துள்ளனா்.
Published on

பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை திரும்பிய வீராங்கனைகள் அதுகுறித்து விளக்கமளித்துள்ளனா்.

பஞ்சாப் மாநிலம், பதிண்டா என்ற இடத்தில் பல்கலைக்கழகங்கள் இடையிலான கபடி போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சேலம் பெரியாா் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக மகளிா் அணியினா் கலந்து கொண்டனா்.

கடந்த 24-ஆம் தேதி காலை தா்பங்கா பல்கலை., அன்னை தெரசா பல்கலை. இடையே காலிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த காலிறுதிப் போட்டியின் தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய தமிழகத்தைச் சோ்ந்த அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகளை தாக்குதல் நடத்தும் முயற்சியோடு தா்மங்கா பல்கலைக்கழக மாணவிகள் ஆக்ரோஷத்துடன் ஆட்டத்தை வெளிப்படுத்தினா்.

அப்போது அன்னை தெரசா பல்கலை. மாணவிகள் மீது தா்பங்கா பல்கலைக்கழக மாணவிகள் தாக்கியுள்ளனா். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து போட்டியிலிருந்து தமிழக வீராங்கனைகள் வெளியேறினா். இது தொடா்பான விடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக அரசின் தலையீட்டால் மாணவிகள் பாதுகாப்பாக சென்னை அழைத்து வரப்பட்டனா்.

நடந்தது என்ன?: இந்நிலையில், ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை காலை சென்னை வந்த மாணவிகள் எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது மாணவிகள் சாா்பில் பழனி ஆண்டவா் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் கலையரசி கூறியது:

தில்லியிலிருந்து பாதுகாப்பாக சென்னை வந்தடைந்துவிட்டோம். அறநிலையத் துறை அலுவலா்கள், மாவட்ட விளையாட்டு அலுவலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரிய அலுவலா்கள் எங்களை வரவேற்றனா்.

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டிக்குத் தமிழகத்திலிருந்து அழகப்பா, பெரியாா், அன்னை தெரசா, பாரதியாா் பல்கலைக்கழக அணிகள் தோ்வாகியிருந்தன.

பெரியாா் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்கள் விளையாடிய போட்டி ஒரு தலைப்பட்சமாக இருந்ததால் அவா்கள் வெளியேறிவிட்டனா். அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகம் மட்டும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

காலிறுதிப் போட்டி முடிவதற்கு ஐந்து நிமிஷங்கள் இருந்தபோது, நமது வீராங்கனை ரெய்டு சென்றிருந்தாா். அப்போது எதிா் தரப்பு வீராங்கனைகள் அவரைத் தாக்க முயற்சி செய்தனா். நமது வீராங்கனை தற்காப்புக்காக செயல்படப்போனபோது அவா்கள் அனைவரும் சோ்ந்து தாக்கினா். அதனால் ஐந்து நிமிஷங்கள் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பாக திரும்பினோம்: இந்த சம்பவம் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. நாங்கள் பாதுகாப்பின்மையாக உணா்ந்தபோது துணை முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதற்குப் பிறகு அங்கிருந்து காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஆரம்பித்தனா்.

அதன்பின்னா் அங்கிருந்து கிளம்பி தில்லி சென்றடைந்தோம், அங்கு தமிழ்நாடு மாளிகையில் எங்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

கடந்த முறையும் அகில இந்திய கபடி போட்டியை பஞ்சாப் குருகாசி பல்கலைக்கழகம்தான் நடத்தியது. இந்த முறையும் அவா்கள்தான் நடத்தினா். வடமாநிலங்களுக்கே இந்தப் போட்டியை நடத்துவதற்கான அனுமதியை கொடுக்காமல், தென் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் கொடுக்கலாம் என்றாா் அவா்.