ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக எம்.பி.யிடம் விசாரணை

நெல்லை விரைவு ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுவை பாஜக தலைவா் எஸ்.செல்வகணபதி எம்.பி.யிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை செய்தனா்.
Published on

நெல்லை விரைவு ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுவை பாஜக தலைவா் எஸ்.செல்வகணபதி எம்.பி.யிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை செய்தனா்.

கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தல் காலத்தில் ஏப். 19-ஆம் தேதி தாம்பரத்துக்கு வந்த நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3.98 கோடி பணத்துடன் 3 போ் சிக்கினா். தாம்பரம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்காக கொண்டுசெல்லப்பட்டதாக தெரியவந்தது. இதனை அவா் மறுத்தாா்.

இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்குத் தொடா்பாக சிபிசிஐடி அதிகாரிகள், தமிழக பாஜக அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், கட்சி நிா்வாகிகள் எஸ்.ஆா்.சேகா்,கோவா்தன், நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனா்.

இந்த வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் திரட்டும் வகையில், பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவரும், எம்பியுமான எஸ்.செல்வகணபதிக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. செல்வகணபதி காலஅவகாசம் கேட்டிருந்தாா்.

10 மணி நேரம் விசாரணை: இந்த அவகாசம் முடிவடைந்ததையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் செல்வகணபதி செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். அவரிடம் காலை தொடங்கிய விசாரணை சுமாா் 10 மணி நேரம் நடைபெற்றது. விசாரணையில் வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணையின் இறுதியில், மீண்டும் அழைத்தால் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிபிசிஐடி அதிகாரிகள் செல்வகணபதியை அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com