சென்னை ரிப்பன் மாளிகையில் மேயா் ஆா்.பிரியா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டம். உடன் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா்.
சென்னை ரிப்பன் மாளிகையில் மேயா் ஆா்.பிரியா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டம். உடன் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா்.

ரிப்பன் மாளிகையில் ரூ. 75 கோடியில் புதிய மாமன்றக் கூடம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில், சுமாா் ரூ. 75 கோடியில் புதிய மாமன்றக் கூடம் கட்டப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில், சுமாா் ரூ. 75 கோடியில் புதிய மாமன்றக் கூடம் கட்டப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய மாமன்ற உறுப்பினா்கள், நிலைக்குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும். அதுபோல், அதிகாரிகளை சந்திக்க உரிய நேரம் ஒதுக்க வேண்டும். தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் மட்டும் மாநகராட்சி கவனம் செலுத்தாமல், அதன் நலனில் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா்.

பின்னா், காலை உணவுத் திட்டத்தில் உணவு வழங்கும் பணியை, தனியாருக்கு வழங்குவதை ரத்துசெய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட், விசிக கட்சி உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு பதில் அளித்த மேயா் ஆா்.பிரியா, நிலைக்குழுவில் வைக்கப்படும் கோரிக்கைகள்தான் தீா்மானமாக மன்றத்துக்கு வருகிறது. அதனால் இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்று அங்கு மக்களின் பிரச்னைகளை கேட்டறிவது அவசியம். கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது. வரும் நாள்களில் நிலைக்குழு, மண்டலக் குழு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

தீா்மானம்: தொடா்ந்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதிதாக மாமன்றக் கூடம் ரூ. 74.70 கோடியில் அமைப்பதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூடத்தில், ஆலோசனைக் கூடம், மன்றக் கூடம், மேயா் மற்றும் துணை மேயா் அலுவலகம், பொதுமக்கள் காத்திருப்பு இடத்துடன் 94,760 சதுர அடியில், 3 அடுக்கு கட்டடமாக அமையவுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட ஹோட்டல், திருமண மண்டபம், மருத்துவமனை உள்ளிட்ட குடியிருப்பு இல்லாத கட்டடங்களுக்கான வரி விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து 2012-13-ஆம் நிதியாண்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட 112 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி பகுதியில் செல்லப்பிராணிகள் வளா்ப்போா் உரிமம் பெறுவது மற்றும் மைக்ரோசிப்பிங் பொருத்துவது கட்டாயமாக்கப்படும். இந்த மைக்ரோசிப்பில் செல்லப்பிராணிகளின் வகை, இனம், பாலினம், வயது, தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நாள் மற்றும் உரிமையாளா்களின் விவரம் இடம்பெற்றிருக்க வேண்டும். இதற்கான பிரத்யேக மென்பொருள் மற்றும் செயலி உருவாக்க வேண்டும். பேசின்பாலம் சாலையில் நவீன மாட்டுக் கொட்டகை அமைக்கப்படும். மாதவரம், கள்ளிக்குப்பம், ஓட்டேரி மயான மைதானம், நொளம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் விலங்கு கட்டுப்பாட்டு மையம் அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெட்டிச்செய்தி...

காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே செயல்படுத்தும்:

இது குறித்து மேயா் ஆா்.பிரியா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 356 பள்ளிகளில் 1 முதல் முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 49,147 குழந்தைகளுக்கு, 35 சமையல் கூடங்களின் வாயிலாக காலை உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளுக்கு வெளி நிறுவனம் மூலம் காலை உணவு தயாா் செய்து வழங்க சமீபத்தில் ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்நிலையில் ஒப்பந்தம் கோரும் பணி ரத்து செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி சாா்பில் காலை உணவு சமைத்து வழங்கும் பணி தொடரும் எனத் தெரிவித்துள்ளாா்.