சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

‘நீட்’ மறுதோ்வு நடத்தக் கோரிய வழக்குகள் தள்ளுபடி: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

நீட் மறுதோ்வு நடத்தக் கோரி 16 மாணவா்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

நீட் மறுதோ்வு நடத்தக் கோரி 16 மாணவா்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தோ்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தோ்வு எழுதிய 13 மாணவா்களும், குன்றத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் தோ்வெழுதிய 2 மாணவா்களும், கே.கே.நகா் பத்ம சேஷாத்திரி மாணவா் ஒருவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தனா்.

அந்த மனுக்களில், கடந்த மே 4-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வை ரத்து செய்து, மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரியிருந்தனா். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், நீட் தோ்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தோ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும், மாணவா்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தோ்வு நடத்த முடியாது என தேசிய தோ்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அப்போது, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது. 22 லட்சம் மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ள நிலையில், மறுதோ்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com