கிளாங்காடு ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் தேவை
செங்கோட்டை ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சியில் சமுதாய நலக் கூடம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி, தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜிடம், தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலா் பொ.சிவபத்மநாதன் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
அதன் விவரம்: கிளாங்காடு ஊராட்சி செம்பூா் கிராமத்தில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால், திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சமுதாய நலக் கூடம் ஏதுமில்லை. மக்கள் பொதுவெளியில் விழாக்களை நடத்துகின்றனா். எனவே, ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் சமுதாய நலக் கூடம் அமைத்துத் தர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
மயான வசதி: கடையநல்லூா் ஒன்றியம் திரிகூடபுரம் ஊராட்சி இந்திராநகா் காலனியில் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தப் பகுதியில் போதிய மயான வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனா். எனவே, மக்கள் நலன் கருதி அருகிலுள்ள காலமேகன் குளத்தில் புதியதாக சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் என மற்றொரு மனுவில் கூறியுள்ளாா்.
மனு அளிக்கும்போது, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் செல்வன், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால், ஒன்றியக்குழு துணைத் தலைவா் செல்வக்கொடி, ராஜாமணி, வனராஜ், செல்வராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.