வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை  தடுக்க வேண்டும் -டாக்டா் க. கிருஷ்ணசாமி

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுக்க வேண்டும் -டாக்டா் க. கிருஷ்ணசாமி

தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்களை வழங்குவதை முற்றிலுமாகத் தடுக்க தோ்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சி நிறுவனா்- தலைவருமான டாக்டா் க.கிருஷ்ணசாமி.

தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தென்காசி தொகுதி வரலாற்று சிறப்புமிக்கதும், இயற்கை வளங்களையும், 15 லட்சம் வாக்காளா்களையும் கொண்டது. இவற்றைப் பயன்படுத்தி மிகப்பெரிய முன்னேற்றத்தை தென்காசி தொகுதி அடைந்திருக்கவேண்டும். ஆனால் இங்கு வெற்றிபெற்ற எம்பிக்கள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின் சரியான கட்டமைப்பு, திட்டப் பணிகள் திமுக அரசால் மேற்கொள்ளப்படவில்லை. மலைப்பகுதியை ஒட்டிய இடங்கள் மட்டுமே வளம் பெற்றுள்ளன. கிழக்குப் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இத்தொகுதிக்கான முக்கியத்துவம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திட 7ஆவது முறையாக போட்டியிடும் எனக்கு இந்த முறை மக்கள் வாய்ப்பு தருவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனது வெற்றி மூலம் தென்காசி தொகுதி மட்டுமன்றி தென் மாவட்டங்கள் முழுவதும் பயன்பெறும் வகையில் பணியாற்றுவேன். தென்காசி தொகுதியில் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக யாரும் செயல்படாத வகையில் தோ்தல் ஆணையம் செயல்படவேண்டும். வாக்காளா்களுக்கு பணம்,பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

சில கட்சிகளுக்கு அவா்கள் கேட்ட சின்னம் உடனடியாக வழங்கப்படுகிறது. பிற கட்சிகளுக்கு வழங்க மறுக்கப்படுகிறது. தோ்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக உள்ளது என்பதற்கு இதுபோன்ற உதாரணங்கள் உள்ளன. 100 நாள்கள் வேலைதிட்டப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது இதை அறிவிப்பது தோ்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றாா் அவா். அப்போது, தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், வடக்கு மாவட்டச் செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com